சத்தீஸ்கர்: மதுவில் விஷம் கலந்து 8 பேர் கொலை - குற்றம் சாட்டப்பட்டவர் கூறிய காரணங்கள் என்ன?
பட மூலாதாரம், Alok Putul
- எழுதியவர், அலோக் புதுல்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சத்தீஸ்கரின் பலோடா பஜார்-பாடாபாரா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பகை மற்றும் தனிப்பட்ட விரோதங்களின் காரணமாக, சிலருக்கு விஷம் கலந்த மது கொடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில், பல மாத இடைவெளியில் உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இருப்பினும், புதையல் ஒன்றைக் கண்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே குற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் கொலைகளைச் செய்ததாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இந்தத் தகவலைப் போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.
இதுவரை நடத்திய விசாரணையில் புதையலுக்காக கொலை செய்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் அத்தகைய வாக்குமூலம் எதையும் அளிக்கவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவரின் மகன், தனது தந்தை வேண்டுமென்றே இதில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நிரபராதி என்றும் கூறுகிறார்.
இந்த வழக்குத் தொடர்பாக பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓ.பி. சர்மா, "காஸ்டோல் பகுதியில் உள்ள கார்வே கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேரின் சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்து ஜூன் 6 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட ராம்ஸஹாய் ஜெய்ஸ்வால் கைது செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் அருந்திய மதுவில் விஷம் கலந்து அவர்களைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்." என்றார்.
உயிரிழந்தவர்களுடன் கடைசியாக காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்
பட மூலாதாரம், Alok Putul
இந்த ஆண்டு பிப்ரவரி 6 முதல் மே 14 வரை, கர்வே கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்ததாக அந்தக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமவாசிகளின் கூற்றுப்படி, அனைவரும் மது அருந்திய பிறகே உயிரிழந்துள்ளனர். மேலும், அவர்கள் கடைசியாக அதே கிராமத்தைச் சேர்ந்த ராம்சஹாய் ஜெய்ஸ்வால் என்பவருடன் காணப்பட்டுள்ளனர்.
கிராமத்தைச் சேர்ந்த காமதா பிரசாத் சாஹு என்பவரின் சகோதரர் சத்துராம் மார்ச் 12 அன்றும், அவரது மருமகன் வினோத் சாஹு மார்ச் 31 அன்றும் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து காம்தா பிரசாத் சாஹு கூறுகையில், "கிராமத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களுக்குப் பிறகு, புதையல் தேடும் பேராசையால் ராம்ஸஹாய் ஜெய்ஸ்வால் 21 பேரைப் பலிகொடுக்கத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நாங்கள் ஜூன் 6-ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்தோம்," என்று தெரிவித்தார்.
மூடநம்பிக்கை மற்றும் புதையல் தேடும் ஆசை காரணமாக 21 பேரைக் கொலை செய்ய ராம்ஸஹாய் ஜெய்ஸ்வால் சதித்திட்டம் தீட்டியதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக கிராமவாசிகள் தங்கள் புகாரில் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிராமவாசிகளின் கூற்றுப்படி, கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற நபருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். ஆனால், சிறிதளவு மது அருந்திய உடனே அவரது உடல்நிலை மோசமடைந்து, வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளார்.
அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்ததால் அவர் உயிர் பிழைத்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கிராம மக்களின் சந்தேகம் மேலும் வலுவடைந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
மதுவில் 'போராக்ஸ்' கலப்பதாகக் குற்றச்சாட்டு
பட மூலாதாரம், Alok Putul
கிராம மக்களின் புகார்களின் அடிப்படையில், முதலில் உயிரிழந்தவர்களில் ஒருவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுக்காக ராய்ப்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அங்கு அவரது உடற்கூராய்வு மற்றும் தடய அறிவியல் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் சந்தேகம் வலுவடைந்ததால், பிற சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணைக்கு அனுப்பப்பட்டன.
காவல்துறையின் தகவலின்படி, பிப்ரவரி 6 முதல் மே 14 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்த எட்டு பேரில், புத்ராம் ஜெய்ஸ்வால் என்பவரின் உடல் தகனம் செய்யப்பட்டது; மற்ற ஏழு பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.
காவல்துறையின் தகவலின்படி, பிப்ரவரி 6 முதல் மே 14 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்த எட்டு பேரில், புத்ராம் ஜெய்ஸ்வால் என்பவரின் உடல் தகனம் செய்யப்பட்டது; மற்ற ஏழு பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.
இந்தக் கிராமத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கபீர் பந்தைப் பின்பற்றுபவர்கள் ஆவர். இவர்களிடம் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கும் வழக்கம் உள்ளது. இந்த ஏழு உடல்களுமே தோண்டி எடுக்கப்பட்டு, ஒரு சிறப்பு மருத்துவக் குழுவினரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
விசாரணையின் போது ஒரு குழு தொடர்ந்து கிராமத்திலேயே தங்கி மக்களிடம் விசாரணை நடத்தி வந்ததாகவும், மற்றொரு குழு தொழில்நுட்ப ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது, எலிகளைக் கொல்வதற்கான மருந்து என்ற பெயரில், குற்றம் சாட்டப்பட்டவர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 'சுஹாகா' என்ற விஷப் பொருளைப் பெற்றிருந்தது போலீஸாருக்குத் தெரியவந்தது.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் முதலில் இந்த நச்சுப் பொருளை ஒரு நாய் மீது சோதித்துப் பார்த்தார்.இதன் பிறகு, அவர் மதுவில் சுஹாகாவைக் கலந்து வெவ்வேறு நபர்களுக்குக் குடிக்கக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணை என்ன சொல்கிறது?
பட மூலாதாரம், Alok Putul
போலீஸாரின் கூற்றுப்படி, காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது குற்றம் சாட்டப்பட்டவர் ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்தார், ஆனால் பின்னர் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பழைய பகை, வாய்த்தகராறு, தனிப்பட்ட மனகசப்புகள், நடத்தை மீதான சந்தேகம் மற்றும் பில்லி சூனியம் தொடர்பான என பல காரணங்களுக்காகவே குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட நபர்களைக் குறிவைத்ததாகக் காவல்துறை தெரிவிக்கிறது.
போலீஸாரின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்களில் சிலருடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிலத் தகராறு இருந்தது. சிலருடன் பணப் பரிவர்த்தனை தொடர்புகள் இருந்தன, சிலரிடம் அவருக்குத் தனிப்பட்ட விரோதம் இருந்தது. இந்தக் காரணங்களுக்காகவே, குற்றம் சாட்டப்பட்டவர் ஒவ்வொருவராக மதுவில் விஷம் கலந்து கொடுத்துக் கொன்றதாகப் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எட்டு பேரைக் கொலை செய்தது மற்றும் ஒருவரைக் கொலை செய்ய முயன்றது உட்பட மொத்தம் ஒன்பது குற்ற வழக்குகளைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்த விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட ராம்ஸஹாய் ஜெய்ஸ்வாலின் மகன் ருத்ரேஷ்வர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "என் தந்தை வேண்டுமென்றே இதில் சிக்க வைக்கப்படுகிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இருப்பினும், சட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது; விரைவில் உண்மை வெளிவரும்," என்று தெரிவித்தார்.
காவல்துறையின் கூற்றுப்படி கொலைகளுக்கான காரணங்கள்:
- 2026 பிப்ரவரி 6: பத்ரியின் மரணம்: குற்றம் சாட்டப்பட்டவர் பத்ரிக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து அவரைக் கொன்றதாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர். பத்ரி தன்னை அடிக்கடி திட்டுவார் என்றும், மது வாங்கித் தருமாறு வற்புறுத்துவார் என்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் தெரிவித்தார்.
- 2026 பிப்ரவரி 20: புதாலுவின் மரணம்: சமூகத்தை அவதூறாகப் பேசியது மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஏற்பட்ட தகராறு ஆகியவற்றை மனதில் வைத்து, குற்றம் சாட்டப்பட்டவர் இவரைக் குறிவைத்ததாகப் போலீஸார் கூறுகின்றனர்.
- 2026 மார்ச் 12: சத்துராம் சாஹுவின் மரணம்: தனது மனைவியை சத்துராம் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டவர் சந்தேகித்ததே இதற்குக் காரணம் என்று காவல்துறை கூறுகிறது.
- 2026 மார்ச் 20: புத்ராம் ஜெய்ஸ்வால் இறந்தார்: நிலப் பரிவர்த்தனை மற்றும் சமூக ரீதியான பகை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவர் இவரைக் குறிவைத்ததாகப் காவல்துறை கூறுகிறது.
- 2026 மார்ச் 31: வினோத் குமார் சாஹுவின் மரணம்: கஸ்டோல் மருத்துவமனையில் இவரது மரணம் நிகழ்ந்தது. தன்னை திட்டியவரை பழிவாங்கும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அவருக்கு விஷம் கலந்த மதுவைக் கொடுத்ததாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
- ஏப்ரல் 28, 2026: கஜானந்த் மரணம்: கஜானந்த் தன் மீது பில்லி சூனியம் வைப்பதாகவும், இதன் காரணமாகவே தனது வாழ்க்கையில் பிரச்னைகள் வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் சந்தேகித்ததாகப் போலீஸார் கூறுகின்றனர்.
- 2026 ஏப்ரல் 29: சைத்தூராமின் மரணம்: அவரிடம் வாங்கிய 50,000 ரூபாய் கடனையும் அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காகக் குற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் கொலைத் திட்டத்தைத் தீட்டியதாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
- 2026 மே 14: மஹேத்ரு ராமின் மரணம்: 2023 தேர்தலின் போது ஏற்பட்ட தகராறு மற்றும் அதன் பிறகு தொடர்ந்து கிண்டலும் கேலியுமாக பேசி வந்ததன் காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவர் இவரைக் குறிவைத்ததாக காவல்துறை தெரிவிக்கிறது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு










